ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
collector kavidha

புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக பணி நியமனம் செய்வதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடத்திற்கு அரசாணையின்படி, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தின்படி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியர்கள் நிரப்பிட ஆதிதிராவிடர் நல இயக்குநர் அவர்களால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500/-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000/-ம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் / பதவி உயர்வு மூலம் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக இப்பணியிடம் அனுமதிக்கப்படும். தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு   தெரிவு செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2023 முடிய உள்ள மாதங்களுக்கு மட்டும் அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகில் உள்ள தகுதியுள்ள நபர்கள் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடமும், 2 இடைநிலை ஆசிரியர் பணியிடமும் காலியாக உள்ளது.

jobs

புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர்கள் அலுவலகங்களை அணுகி காலிப்பணியிடங்களை தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்ற நபர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பட்டதாரி / இடைநிலை ஆசிரியருக்கு விண்ணப்பிப்போர் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து  வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு உயர்வு மூலமாகவோ அல்லது மாறுதல் மூலமாகவோ பணியிடம் நிரப்பப்படின் உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்படுவார்கள். 

தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பத்தினை எழுத்து மூலமாக உரிய கல்வித் தகுதி சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 18.01.2023-க்குள் விண்ணப்பித்திட வேண்டும் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.