தாராபுரம் அருகே கண்டெயனர் லாரியுடன், மற்றொரு லாரி மோதல்... ஓட்டுநர் உடல் கருகி பலி!

 
dd

தாராபுரம் அருகே கண்டெய்னர் லாரி, மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதி தீப்பற்றி எரிந்ததில், ஓட்டுநர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

திருப்பூரில் இருந்து தாராபுரத்துக்கு இருசக்கர வாகனங்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.  தாராபுரம் அருகேயுள்ள தாயம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, எதிரே வந்த மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் 2 லாரிகளிலும் தீப் பற்றி மளமளவென எரிந்தது. இதில் கண்டெய்னர் லாரியின் ஓட்டுநரான பிரபாகரன் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

dharapuram

அவருடன் வந்த கார்த்திக், ராபி லால் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்த 64 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.