பெட்ரோல் பங்க் அருகே தீப்பற்றி எரிந்த ஆம்னிவேன்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

 
car fire

திண்டுக்கல் நகரில் பெட்ரோல் பங்க் அருகே ஆம்னி வேன் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் தோப்புபட்டி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர், தனது ஆம்னி வேனை பழுது பார்ப்பதற்காக திண்டுக்கல்லுக்கு ஓட்டி சென்று கொண்டிருந்தார். அவருடன் இ.சித்தூர் பகுதியை சேர்ந்த நாகேந்திரன், விக்னேஷ் ஆகியோரும் சென்றனர். வழியில் திண்டுக்கல் பழைய கரூர் சாலை பெஸ்கி கல்லூரி அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் அவர்கள் பெட்ரோல் நிரப்பினர். பின்னர் பங்கில் இருந்து புறப்பட்டு வெளியே சாலையை கடக்க முயன்றனர்.

car fire

அப்போது, திடீரென ஆம்னி வேனின் முன் பகுதியில் தீ பற்றியது. இதை கவனித்த காரில் இருந்த மாணிக்கம் உள்ளிட்ட 3 பேரும் உடனடியாக காரை சாலையில் நிறுத்திவிட்டு வெளியேறினர். காரில் தீப்பற்றியதை கண்ட பங்க் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் காரில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர். அதற்குள்ளாக கார் முழுவதும் தீ பரவி சாலையில் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஆம்னி வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து திண்டுக்கல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.