நாகை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி!

 
dead

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே காலனி வீட்டை இடித்தபோது ஸ்லாப் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள ஆதமங்கலம் தென் மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. விவசாயி. இவரது மனைவி அன்னப்பட்டு. தம்பதியினர் இருவரும் இளைய மகனான மணிகண்டன் உடன் காலனி வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், மணிகண்டனுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் வீடு கட்டுவதற்காக காலனி வீட்டை இடிக்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று மேற்பகுதி பாதி இடிக்கப்பட்ட வீட்டிற்குள் அன்னப்பட்டு சென்றுள்ளார். அப்போது, முன்பகுதியில் இருந்த சிமெண்ட் ஸ்லாப் அவர் மீது திடீரென இடிந்து விழுந்தது.

nagai

இதில் பலத்த காயமடைந்த அன்னப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் ஆலிவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்னப்பட்டுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதிய வீடு கட்டுவதற்காக வீட்டை இடித்தபோது ஸ்லாப் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.