குழித்துறையில் அரசுப்பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி... மதுபோதையில் தள்ளிவிட்ட இளைஞரிடம் விசாரணை!

 
dead

குமரி மாவட்டம் குழித்துறையில் மதுபோதையில் இளைஞர் தள்ளியதில் சாலையில் தவறி விழுந்த முதியவர், அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் முத்தையன்(70). கூலி தொழிலாளி. இவர் நேற்று, அதே பகுதியை சேர்ந்த பிரஜித் என்ற இளைஞருடன், குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி உள்ளார். மதுபோதை தலைக்கேறிய நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, இருவரும் டாஸ்மாக் கடையில் இருந்து புறப்பட்டு சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது, வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பிரஜித், முத்தையனை தள்ளியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்த முத்தையன் மீது பளுகலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் சக்கரம் ஏறியது. இதில் முத்தையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

kulithurai

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள், களியக்காவிளை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முதியவர் முத்தையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பிரஜித்தை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.