கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி முதியவர் பலி!

 
gudalur

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நேற்று காட்டுயானை தாக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட டெல்லோஸ் பகுதியை சேர்ந்தவர் சிவனாண்டி(65). இவர் நேற்று மாலை  தனது வீட்டிற்கு விறகு சேகரிப்பதற்காக அங்குள்ள காப்பி தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, புதரில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று சிவனாண்டியை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர், சிவனாண்டியின் உடலை மீட்க முயன்றனர். அப்போது, அங்கு திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள், உடலை எதிர்க்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

elephant

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, காட்டுயானை தாக்கி இறந்த சிவனாண்டியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், குடியிருப்புகளுக்குள் வன விலங்குகள் புகுவதை தடுக்க சோலார் மின்வேலிகள் அமைக்கப்படும் என்றும் உறுதி அளிததனர். அதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, முதியவர் சிவனாண்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.