சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - தொழிலாளி பலி!

 
dead body

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஒருவர் பலத்த காயமடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விஜயா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை திருத்தங்கலை சேர்ந்த தொழிலாளர்கள் ரவி (60), சாமுவேல் ஜெயராஜ்(48) ஆகியோர் தனி அறையில் பட்டாசு தயாரிக்க மருந்துகளை தயார் செய்து கொண்டிருந்தனர். காலை 11 மணி அளவில் எதிர்பாராத விதமாக அவர்கள் இருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த அறை இடிந்து தரை மட்டமானது. இந்த விபத்தில், தொழிலாளி ரவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

sivakasi

சாமுவேல் ஜெயராஜ் பலத்த தீக்காயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த சாமுவேல் ஜெயராஜை மீட்டு, சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 70 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் அடைந்த அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெடி விபத்து குறித்து சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியை தீவிரமாக தேடி வருகின்றனர்.