நிலத் தகராறில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி... தலைவாசல் அருகே பரபரப்பு!

 
fire

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நிலத் தகராறில் இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் வடக்குபுதூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. விவசாயி. இவரது மகன் முருகன். இவருக்கும், இவரது தோட்டத்தின் அருகில் உள்ள அபிமன் என்பவருக்கும் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நில பிரச்சினை தொடர்பாக இன்று காலை முருகனுக்கும், அபிமனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியுள்ளது. 

thalaivasal

இதில் ஆத்திரமடைந்த அபிமன், அவரது மனைவி தவமணி, அவரது உறவினர் உள்ளிட்ட 4 பேர், முருகனை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும், அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பி வந்த முருகனை, உறவினர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து அவர் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.