டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி... கோவை அருகே பரபரப்பு!

 
cbe

கோவை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம், மர்மநபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நீலகிரியை சேர்ந்தவர் விஜயானந்த்(46). இவர் கோவை மாவட்டம் சிறுமுகையில் இருந்து அன்னுர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பிற்பகல் 2 மணி அளவில் விஜயானந்த், டாஸ்மாக் கலெக்ஷன் பணம் ரூ.10 லட்சத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள இந்தியன் வங்கியில் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சிறுமுகை சாலை ஆலாங்கொம்பு அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 4 பேர் கும்பல் விஜயானந்தை வழிமறித்தது.

cbe

பின்னர் அந்த கும்பல் பட்டா கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் விஜயானந்த் அவர்களிடம் பணத்தை கொடுக்காமல் போராடினார். அப்போது, அந்த வழியாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் திரண்டதால் கொள்ளையர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து விஜயானந்த் சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

cbe

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக கடந்த ஜுலை மாதமும் விஜயானந்திடம் மர்மநபர்கள் பணத்தை பறித்துச் செல்ல முயன்றது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, விஜயானந்திடம் மர்மநபர்கள் பணத்தை பறிக்க முயன்ற சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.