திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவி பலி!

 
dead

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள ஏ.வி.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. செங்கல்சூளை தொழிலாளி. இவரது மனைவி முத்துராணி. இவர்களது மூத்த தவதர்ஷிணி (13). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை சிறுமி தவதர்ஷினி குளிப்பதற்காக ஹீட்டர் கம்பியை வைத்து தண்ணீரை சுட வைத்துள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் தண்ணீர் சூடாகிவிட்டதா? என பார்ப்பதற்காக தண்ணீரில் கை வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

dgl gh

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தவதர்ஷினி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.