சிறுமுகை வனப்பகுதியில் 8 மாத குட்டி யானை உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை!

 
elephant

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் 8 மாத ஆண் குட்டி யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை காப்புக்காடு பகுதியில் நேற்று மாலை வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப் பகுதியில் சுமார் 8 மாத வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஓன்று வாயில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்தது. இது குறித்து அவர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

sirumugai forest

அதன் பேரில், சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று இறந்த குட்டி யானையின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து,மாவட்ட வனகால்நடை மருத்துவர் சுகுமார், சிறுமுகை உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் இறந்த யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளனர். அதன் பின்னரே யானை இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.