திண்டுக்கல்லில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... தாயின் மூன்றாவது கணவர் போக்சோவில் கைது!

 
pocso

திண்டுக்கல்லில் மகள் முறையிலான 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாயின் 3-வது கணவரை போலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (44). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே, அவர் திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த 37 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்துள்ள நிலையில், இரண்டாவது கணவர் மூலம் அவருக்கு 11 வயது சிறுமி உள்ளிட்ட 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், சென்னமநாயக்கன்பட்டியில் தனியாக வசித்து வந்த அந்த பெண் முருகனை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். 

dindigul

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு, முருகன் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், முருகன் மீது தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் மகள் முறையிலான சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.