கிணற்றில் தவறி விழுந்து 11 மாத குழந்தை மரணம்... காப்பாற்ற முயன்ற தாயும் பலியான சோகம்!

 
dead

சேலம் அம்மாபேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து 11 மாத பெண் குழந்தை இறந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற தாயும் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் வினோத். விவசாயி. இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மீனா (25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சுபஸ்ரீ  என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. குழந்தை சுபஸ்ரீக்கு இன்று பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளதால், பெற்றோர் அவருக்கு புத்தாடை, கேக் உள்ளிட்டவற்றை வாங்கி வைத்து, விமரிசையாக கொண்டாட திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில், வினோத் வீட்டின் அருகில் தரைக் கிணறு உள்ளது.

salem

நேற்று மதியம் மீனா கிணற்றின் அருகே சென்று குழந்தை சுபஸ்ரீக்கு சாப்பாடு ஊட்டி விட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தை சுபஸ்ரீ கிணற்றில் தவறி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீனா கிணற்றில் குதித்து குழந்தையை காப்பாற்ற முயன்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தாயும், குழந்தையும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கிணற்றில் குதித்து தேடியபோது தாய் மகள் இருவரது உடல்களும் மீட்கப்பட்டது. தொடர்ந்து, அம்மாபேட்டை போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.