தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் விறுவிறுப்பு!

 
textile market

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரை நடைபெற்றதாகவும், சில்லறை வியாபாரம் 30 சதவீதம் வரை நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வர். மற்ற இடங்களை விட விலை குறைவு என்பதால், ஜவுளி சந்தையில் கூட்டம் அலைமோதும். அதேபோல், பண்டிகை நாட்களிலும் அதிகளவில் கூட்டமிருக்கும்.

textile market

கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் மந்தமான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது புரட்டாசி மாதம் தொடங்கியதால் கோவில்களில் அடுத்தடுத்து விழாக்கள் வர உள்ளன. அத்துடன், அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று கூடிய ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் விறுவிறுப்புடன் நடைபெற்றது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர்.

அதேவேளையில், சில்லறை வியாபாரம் சற்று மந்தமுடன் நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி ஜவுளி சந்தையில் பாவாடை, நைட்டி, வேட்டி, சட்டைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன. நேற்றைய சந்தையில் மொத்த வியாபாரம் 40 சதவீதமும், சில்லறை வியாபாரம் 30 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், அடுத்த வாரத்திலிருந்து தீபாவளி விற்பனை களைகட்டும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.