சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பின் தொலைதொடர்பு வசதி பெற்ற மலைக்கிராமம்!

 
dharmapuri

தருமபுரி மாவட்டம் சித்தேரி ஊராட்சியில் மலைப்பகுதியில் அமைக்கப்பட்ட தனியார் செல்போன் கோபுர தொலைத்தொடர்பு சேவையை மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சித்தேரி மலை கிராமம், 62 குக்கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இங்குள்ள பல மலை கிராமங்களில் மக்கள் சாலை, மருத்துவம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளுமின்றி தவித்து வருகின்றனர். செல்போன் பேசுவது என்றால், மலையின் உச்சியில் ஒரு சில இடங்களில் நின்று பேசுவதும், 10 கி.மீ. கடந்த வந்து வாச்சாத்தி பகுதியில் வந்து பேசிவிட்டு செல்வதும் வழக்கமாக உள்ளனர். மேலும், கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத நிலையும் இருந்து வந்தது. 

internet

இந்த நிலையில், சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் சண்முகத்தின் தொடர் முயற்சியின் காரணமாக தருமபுரி தொகுதி திமுக எம்பி செந்தில்குமார் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றி, மலைக்கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனிடையே அந்த பகுதியில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூலம் செல்போன் கோபுரம் அமைக்க இயலாததால், ஜியோ நிறுவனம் மூலம் செல்போன் கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஜியோ நிறுவனம் அரசநத்தம், கலசப்பாடி, கோட்டக்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்க முன் வந்தது. 

தொடர்ந்து, செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பாகங்களை மலைக்கிராம மக்கள் வாகனத்தில் எடுத்துச்சென்று, அவர்களுக்கு உதவி செய்து கலசப்பாடி - அக்கரைக்காடு மலைப்பகுதியில் செல்போன் கோபுரத்தை அமைத்தனர். பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட  ஆட்சியர் சாந்தி மலைக்கிராமத்திற்கு சென்று, செல்போன் கோபுரத்தை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தர்மபுரி எம்பி செந்தில்குமார், எம்எல்ஏ சம்பத்குமார், சித்தேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்தி சக்திவேல், இருளப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் குமார்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்