ஆடிப்பெருக்கு விழா - திருச்சி மாவட்ட காவிரி கரையோர பகுதிகளில் புதுமண தம்பதியர் வழிபாடு!

 
aadi 18

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருச்சி மாவட்ட காவிரி கரையோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான புதுமண தம்பதிகள் மற்றும் சுமங்கலி பெண்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.  

ஆடி 18-ஐ ஒட்டி காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் இன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபம், ஓடத்துறை, முக்கொம்பு மேலணை உள்ளிட்ட 63 இடங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது.

Aadi

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் அதிகாலையிலேயே திரண்ட ஆயிரக்கணக்கான புதுமண தம்பதிகள் மற்றும் பொதுமக்கள் காவிரியில் புனித நீராடினர். பின்னர், படித்துறையில் சுமங்கலி பெண்கள் தேங்காய், பழங்கள், மஞ்சள், குங்குமம், பச்சை அரிசி, காதோலை கருகமணி, நாவல் பழம் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்து படையலிட்டு வழிபட்டனர். பின்னர் அவற்றை காவிரி நீரில் விட்டனர். மேலும், புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலைகள் ஆற்றில் விட்டு காவிரி அன்னை வாங்கியதோடு, புதிய மஞ்சள் கயிற்றினை தங்களது கைகளில் கட்டிக்கொண்டனர். 

ayyalamman

இதேபோல், அய்யாளம்மன் படித்து, முக்கொம்பு மேலணை உள்ளிட்ட இடங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காவிரியில் புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் வருவாய்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.