"கைத்தறிக்கென ஒதுக்கிய இரகங்களை உற்பத்தி செய்தால் நடவடிக்கை"... விசைத்தறி நெசவாளர்களுக்கு, தருமபுரி ஆட்சியர் எச்சரிக்கை!

 
dharmapuri dharmapuri

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யும் விசைத்தறி நெசவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி எச்சரித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், விசைத்தறியாளர்கள் மற்றும் துணி ஆலைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து கைத்தறி நெசவாளர்களை பாதுகாக்கவும்,  அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் 1985 இயற்றப்பட்டு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை விவகார எல்லையாக கொண்டு உதவி அமலாக்க அலுவலர் அலுவலகம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு 5ன் கீழ் ஓரு சில தொழில்நுட்ப  குறிப்பீடுகளுடன் 11 இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்திட தடை செய்யப்பட்டு உள்ளது. கைத்தறி இரக ஒதுக்கீடு ஆணை அறிவிப்பு எண் S.O.No.2160(E) நாள் : 03.09.2008-ன்படி பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை இரங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

power looms

இந்த இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் 1985ன் படி தண்டைக்குரிய செயலாகும். கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த இரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வின்போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த இரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 6 மாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை வழங்கப்படும். எனவே தருமபுரி மாவட்ட விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்கவும், நீதிமன்ற அபராதம் மற்றும் சிறை தண்டனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும்.

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை இரகங்கள் குறித்து விளக்கம் பெற சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 4ஆம் தளம், 408-ல் இயங்கி வரும் உதவி அமலாக்கப்பிரிவு அலுவலகத்தையோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (0427 - 2417745) தொடர்பு  கொள்ளலாம் என  ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.