"குடியரசு தினத்தன்று பட்டியலின ஊராட்சி தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்தால் நடவடிக்கை" - காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை!

 
vinayagar chaturthi - Kanchipuram Collector Aarthi

குடியரசு தினத்தன்று பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதை தடுக்கும் விதமாக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.   

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறும். மேலும், அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் தேசியக்கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

kanchipuram

மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்களின் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராம ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக எண் - 044-27237175 மற்றும் 7402606005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்குமாறு, ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.