ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை... விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை!

 
virudhunagar

ஆபத்தான முறையில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால், தொடர்புடைய வாகனங்களின் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீதும், மாணவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி, கல்லுரிகளுக்கு படிகட்டுகளில் நின்று பயணம் செய்யக்கூடாது என தெரிவித்தும், பாதுகாப்பான முறையில் சென்று வருவது குறித்தும், போக்குவரத்துத்துறை, காவல் துறை, அரசு போக்குவரத்துக்கழகம், தனியார் பேருந்து மற்றும் சிற்றுந்து உரிமையாளர்கள் நல சங்கம் மற்றும் கல்வித்துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், பள்ளி மற்றும் கல்லுரி மாணவர்கள் காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் தொடர்ந்து படிக்கட்டில் உயிரிழப்பு மற்றும் பெரும் காயம் ஏற்படுத்தும் வகையில் அபாயகரமான முறையில் பயணம் செய்வது குறித்து நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகளின் மூலம் தெரியவருகிறது.

bus

பள்ளி மற்றும் கல்லுரிக்கு மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யாமல் பாதுகாப்பாக சென்று வர அனைத்துத்துறை  கள அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, விதிமீறல்களில் ஈடுபடும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் தனியார் பேருந்து மற்றும் சிற்றுந்து வாகன உரிமையாளர்களின் அனுமதி சீட்டு மீதும், தொடர்புடைய வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள்  மீதும் மோட்டார் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

படிகட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது கல்வித்துறை மற்றும் காவல்துறையின் மூலம் உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கல்வித்துறை, காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஆகிய தொடர்புடைய அலுவலர்கள் இதுகுறித்து தனி கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது, என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.