"கொரட்டகிரியில் விதிமீறலில் ஈடுபடும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை"... கிராம மக்களிடம், கிருஷ்ணகிரி ஆட்சியர் உறுதி!

 
krishnagiri

கிருஷ்ணகிரி அருகே கொரட்டகிரி கிராமத்தில் விதிகளை மீறி செயல்படும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தில் 6 கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல் குவாரிகளால் கிராமத்தில் உள்ள  சுற்றுச்சூழல் பாதிப்படைந்து, பொது மக்களுக்கு உடலநலம் பாதிக்கப்படுவதாவும், கிராமத்தின் வழியாக குவாரிகளுக்கு கனரக வாகனங்கள் செல்வதால் சாலைகள் சேதமடைந்து உள்ளதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கல் குவாரிகளில் இருந்து வரும் லாரிகள் கிராம சாலை வழியாக செல்ல தடை விதிக்கக் கோரி கொரட்டகிரி மக்கள் கிராமத்தில் இருந்து வெளியேறி காட்டில் கூடாரம் அமைத்து கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

கிருஷ்ணகிரி தொகுதி எம்பி செல்லக்குமார் கடந்த திங்கட்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை நேரில் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். இந்த நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுடன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்குர், ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, கனிம வளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

krishnagiri

இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி, கொரட்டகிரி கிராமத்தில் உள்ள கல்குவாரிகள் மீது மக்கள் அளித்த புகார்கள் மீது தல தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓசூர் சார் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என கூறினார். கனரக வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா? என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

மேலும், கிராமத்தின் வழியாக லாரிகள் செல்ல தடை விதிக்க முடியாவிட்டால் குறைவான எண்ணிக்கையிலோ அல்லது மாற்றுப்பாதையிலோ வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி,  விதிகளை மீறி செயல்படும் கல் குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், கொரட்டகிரி கிராம மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் உறுதி அளித்தார்.