ஆடி அமாவாசை திருவிழா பணிகள் ; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆட்சியர் ஆய்வு!

 
sadhuragiri

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை ஒட்டி, கோவிலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை, விருதுநகர்  ஆட்சியர் மேகநாத ரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வரும் 28ஆம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி, வரும் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி நேற்று சதுரகிரி மலைக் கோவிலில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

sadhuragiri

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் மேகநாத ரெட்டி,  ஆடி அமாவாசை திருவிழாவுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், போதிய பாதுகாப்பு வழங்கவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், பக்தர்கள் காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கூறிய ஆட்சியர், பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் விதமாக ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

இதேபோல், பக்தர்களின் வசதிக்காக விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஆட்சியர், வெளியூர் பேருந்துகள் மற்றும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த வசதியாக தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகர், சிவகாசி சார் ஆட்சியர் பிருத்விராஜ், மேகமலை - ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.