ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டி கோவையில் அதிமுகவினர் சிறப்பு தொழுகை!

 
admk

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வெற்றிபெற வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தர்காவில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பழமையான பெள்ளாதி தர்கா உள்ளது. இந்த தர்காவில் அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையவும் வேண்டி இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், அதிமுக சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள், எம்எல்ஏ-க்கள் ஏ.கே.செல்வராஜ், பிஆர்ஜி அருண்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

tamilmagan hussain

இதனை தொடர்ந்து, கட்சியினர் இடைய தமிழ்மகன் உசேன் பேசியதாவது :- நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சிறுபான்மை மக்களின் ஆதரவோடு மாபெரும் வெற்றி பெறும். திமுக அளித்த 525 வக்குறுதி என்ன ஆனது?, என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆளும்கட்சியின் பொய் வாக்குறுதியை  நம்பி வாக்களித்த மக்கள், இன்று எப்போது இந்த ஆட்சி வீட்டிற்கு போகும் , மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதிமுக கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு அதிமுகவை பற்றியும், இரட்டை இலை பற்றியும் பேச எந்த தகுதியும் இல்லை. அதிமுக மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதன் முழு பலனும் எதிரொலிக்கும் என அவர் தெரிவித்தார்.