மின்கட்டண உயர்வுக்கு எதிராக ஈரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

 
admk

ஈரோட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

ஈரோட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ-க்கள் பிசி இராமசாமி, சிவசுப்பிரமணி, கிட்டுசாமி, பூந்துறை பாலு, கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.வி.ராமலிங்கம், அதிமுக ஆட்சியில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது மின்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மின்சார மீட்டர்களுக்கு மாதம்தோறும் ரூ.60 மக்கள் கட்ட வேண்டும் என்றும், பராமரிப்பு கட்டணம் என்று தனியாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஈரோட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.560 கோடியில் உருவாக்கப்பட்ட ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை சரியாக பராமரிக்காததால், மக்களுக்கு குடிநீர் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை கிடைப்பதாக அவர் தெரிவித்தார். 

dd

மேலும், 2 கேஸ் சிலிண்டர் உள்ளதாக கூறி 60 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு ஓய்வுஊதியம் நிறுத்தப்பட்டதகாவும், அதேபோல் 35 கிலோ இலவச அரிசியும், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிறுத்தப்பட்டதாகவும் ராமலிங்கம் தெரிவித்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் -ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டதாக கூறிய அவர், ஆனால் கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் 4 நாட்களுக்கு பின்னர் மிகப்பெரிய வன்முறை வெடித்ததாகவும், இது காவல்துறையின் செயலின்மையை காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். அத்துடன் லாக்கப் மரணங்கள், கஞ்சா விற்பனை அதிகரிப்பு என சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி .பழனிச்சாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால் கவுன்சிலர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ்,தங்கவேலு, பகுதி கழக செயலாளர்கள் மனோகரன் கேசவமூர்த்தி  மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்