தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி அதிமுக தான் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி!

 
Velumani

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அதிமுக தான் என்றும், தைரியம் இருந்தால் திமுக தனித்து நிற்கட்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். 

மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி உள்ளிட்டவற்றை உயர்த்தி திமுக அரசை கண்டித்து கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாதம்பட்டியில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு, திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.அப்போது, ஆட்சிக்கு வந்து 20 மாதங்களில் கோவைக்கு எந்த திட்டங்களையும் செய்ய வில்லை என்றும், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தாதை கண்டித்தும், சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். 

admk

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: - பாமக கூட்டணி தொடர்பான குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார். யாரையும் துன்புறுத்தி பேச வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. எல்லோரும் சொல்கிறார்கள் அதிமுக பிளவுபட்டு விட்டது என்று. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக உள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி திமுக கிடையாது, அதிமுக தான்.

velumani

தைரியம் இருந்தால் திமுக தனித்து நிற்கட்டும், நாங்களும் தனித்து நிற்கிறோம். எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுகவுக்கு இணையான கட்சி எதுவும் இல்லை. அதிமுக கூட்டணி கட்சியை எப்போதும் அனுசரித்தே செல்லும். அதனை வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் பார்ப்பீர்கள். கிராமங்கள், பேரூராட்சிகள் தோறும் திமுகவை எதிர்த்து போராட்டம் நடத்தும் சக்தி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.