தொகுதி பிரச்சினைகள் குறித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கிய கோவை அதிமுக எம்எல்ஏ-க்கள்!

 
cbe

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம், முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் 9 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது தொகுதி பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் உள்ள 10 முக்கிய பிரச்சினைகளை பட்டியலிட்டு, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும்படி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களும், தங்களுடைய தொகுதி பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 9 அதிமுக எம்எல்ஏக்களும், கோரிக்கை மனுக்களை அளித்தனர். அப்போது, 9 எம்எல்ஏக்களும் தங்களுடைய தொகுதி பிரச்சினைகள் குறித்து தனித்தனியே விளக்கம் அளித்தனர்.

velumani

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 10 கோரிக்கைகள்  ஆட்சியரிடம் வழங்கலாம் என கடிதம் வந்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிம் கோரிக்கைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். தற்போது சாலைகள் அனைத்தும்  மோசமாக உள்ளதாகவும், இதனை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளதாகவும் வேலுமணி கூறினார்.  அதேபோல், மாநகராட்சியில் பதாள சாக்கடை மற்றும் பைப் லைன் பணிகளுக்காக தோண்டிய சாலைகள் அனைத்தும் மழையின் காரணமாக விபத்துகள் ஏற்படுவதாக கூறிய அவர், அரசு முதலில் சாலைகளை சரிசெய்ய வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய எஸ்பி வேலுமணி, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைத்ததாகவும், முந்தை ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் அனைத்தையும் செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

மேலும், வெள்ளலுர் பேருந்து நிலையத்தை பொருத்தவரை 50 சதவீதம் நிறைவடைந்த பணிகளை ஏதோ உள்நோக்கத்தோடு நிறுத்திவிட்டதாக குற்றம்சாட்டிய வேலுமணி, அதனை தொடர்ந்து செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார். அதனால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் முழுமையாக குறையும் என்றும் கூறினார். மேலும், ஊழல் வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.