ஆதரவற்ற தொண்டரின் உடலை சொந்த செலவில் அடக்கம் செய்த அதிமுக எம்எல்ஏ!

 
perundurai

பெருந்துறை அருகே ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த அதிமுக தொண்டரின் இறுதிச்சடங்கை, எம்எல்ஏ எஸ்.ஜெயகுமார் தனது சொந்த செலவில் மேற்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கைக்கோளபாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமணன். நெசவுத் தொழிலாளியான இவர் தனது மகளுடன் தனியே வசித்து வந்தார். மேலும், அதிமுக தொண்டரான இருவர் கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று உடல் நலக்குறைவு காரணமாக லட்சுமணன் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், அந்த பகுதியை சேர்ந்த மாவட்ட அதிமுக நிர்வாகி மணி, ஒன்றிய குழு உறுப்பினர் விஜயலட்சுமி சாமிநாதன், பெரிய வீரசங்கிலி ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் அவரது இறுதிச்சடங்கை ஏற்று நடத்தினர். தொடர்ந்து, நேற்று மாலை அவரது உடல் பெருந்துறை அமைதி பூங்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

perundurai

அப்போது, அங்கு வந்த பெருந்துறை தொகுதி எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார், மறைந்த லட்சுமணன் உடலுக்கு கட்சி கொடியை போர்த்தி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது உடலை அடக்கம் செய்ய உண்டான செலவையும் எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே.செல்வராஜ், பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூர் செயலாளர் கே. எம். பழனிசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.