பெருந்துறை அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக எம்எல்ஏ நிதியுதவி!

 
தீ விபத்து

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் நிவாரண உதவிகளை வழங்கினார். 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லப்பாளையம் ஒண்டிப்புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி பாக்கியம்மாள். கணவரை இழந்த இவர் தனது 2 மகன்களுடன் உடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை பாக்கியம்மாள் மற்றும் அவரது மகன் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பாக்கியம்மாள் வீட்டில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

பெருந்துறை

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இந்த தீ விபத்தில் பாக்கியம்மாளின் வீட்டிலிருந்த வாகனம், பீரோ, கட்டில், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து தகவல் அறிந்த பெருந்துறை தொகுதி எம்எல்ஏவும், மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பாக்கியம்மாள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், அவர்களுக்கு நிதி உதவி மற்றும் அரிசி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருள்களையும் எம்எல்ஏ ஜெயக்குமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் செயலாளர் கே.எம். பழனிச்சாமி, பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ், பெருந்துறை பேரூர் செயலாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர்.