"பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் வணிக வளாகம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்"... அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் வலியுறுத்தல்!

 
perumndurai

பெருந்துறை தினசரி காய்கறி மார்க்கெட்டில் வணிக வளாகம் அமைக்கும் முடிவை கைவிட்டு, மார்க்கெட்டை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் வகுக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. 180 கடைகளுடன் செயல்பட்டு வரும் இந்த மார்க்கெட்டை அப்புறப்படுத்தி, பெருந்துறை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக வணிக வளாகம் அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வணிக வளாகம் அமைக்க காய்கறி வியாபாரிகளும், விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வரும் சனிக்கிழமை முதல் வியாபாரிகள் கடைகளை காலி செய்ய வேண்டுமென, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  

இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் சீனிவாசன் தலைமையில் மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, கொமதேக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், தமாகா, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் மற்றும் சமூக நல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு வணிக வளாகம் அமைக்கும் திட்டத்தை கைவிடவும், தினசரி காய்கறி மார்க்கெட் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். 

perundurai

இந்த கூட்டத்தில் பேசிய பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக காய்கறி மார்க்கெட் இயங்கி வருவதாகவும், இது நகரின் மையப் பகுதியாகவும், பல்வேறு இடங்களிலிருந்து வரக்கூடிய வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பழக்கப்பட்ட பகுதியாகவும் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். மார்க்கெட்டை அகற்றிவிட்டு வணிக வளாகம் அமைப்பது, இதனையே நம்பியிருக்கும் விவசாயிகளுக்கும் காய்கறி வியாபாரிகளுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறிய அவர், வணிக வளாகத்தை நகரில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் அமைக்க முடியும் என்றும், ஆனால் மார்க்கெட் அப்படி அமைக்க முடியாது என்றும் கூறினார்.  எனவே இந்த  திட்டத்தை அரசு கைவிட்டு, மார்க்கெட்டை மேம்படுத்தும் விதமாக புதிய திட்டம் தயாரித்து, அதனை செயல்படுத்தி விவசாயிகளுக்கும், காய்கறி வியாபாரிகளுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அதுவரை மார்க்கெட் பகுதியில் இருந்து காய்கறி கடைகளை அப்புறப்படுத்தக்கூடாது என அதிமுக சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் எம்எல்ஏ ஜெயக்குமார் கூறினார்.

இந்த கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித் ராஜ், விஜயன், ராம், முன்னாள் அவைத்தலைவர் ஜெகதீஷ், பேரூர் செயலாளர்கள் பழனிச்சாமி, கல்யாண சுந்தரம், இளைஞரணி அருணாச்சலம், பொருளாளர் மணி, மாணவரணி மணிகண்டன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.