குமரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது!

 
rape

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). இவர் மாணவியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் மாணவியின் தாய் வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில் மாணவியும், 12ஆம் வகுப்பு படிக்கும் அவரது அண்ணனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அவர்களது வீட்டிற்கு வந்த சதீஷ்குமார், சிறுமியின் அண்ணனுடன் தகராறு செய்துள்ளார்.

arrest generic

இதனால், சிறுமியின் சகோதரன் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, தனியாக இருந்த மாணவிக்கு, சதீஷ்குமார் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், பள்ளிக்கு சென்ற மாணவிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆசிரியை விசாரித்தபோது, மாணவி தனக்கு நிகழ்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார். இதுகுறித்து ஆசிரியை மாணவியின் தாய்க்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.