கம்பத்தில் குடும்ப தகராறில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

தேனி மாவட்டம் கம்பத்தில் குடும்ப தகராறில் நாளிதழ் செய்தியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐய்யப்பன். இவரது மகன் ஜெயபிரகாஷ்(46). இவர் பிரபல மாலை நாளிதழ் ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். ஜெயப்பிரகாஷ் குடும்ப செலவிற்காக பலரிடமும் கடன் பெற்றுள்ளார். ஆனால் கடனை சரிவர செலுத்த முடியாததால் வேதனையில் இருந்து வந்துள்ளார்.  இதனால் அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

cumbum

நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஜெயபிரகாஷுக்கும், மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் விரக்தியடைந்த ஜெயப்பிரகாஷ், நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலையில் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, அவர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த கம்பம் தெற்கு போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.