பண்ருட்டி அருகே கபடி விளையாட்டின்போது இளைஞர் மயங்கி விழுந்து பலி

 
panruti

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கபடி போட்டியில் பங்கேற்ற இளம்வீரர் மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மானடிகுப்பம் கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு பெரிய புரங்கணி கிராமத்தை சேர்ந்த முரடுக்காளை அணி வீரர்கள் பங்கேற்ற போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரிய புரங்கணியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வம் என்பவரது மகன் விமல்ராஜ்(21) பங்கேற்று விளையாடினார். போட்டியிபோது, ரெய்டு சென்ற விமல்ராஜை எதிரணியினர் மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது, அவர்களிடம் பிடிபடாமல் இருக்க எகிறி குதித்த விமல்ராஜ், திடீரென களத்தில் மயங்கி விழுந்தார்.

panruti

இதனால் அதிர்ச்சி அடைந்த சக  வீரர்கள் மற்றும் கிராமத்தினர் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் முத்தண்டி குப்பம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.