தஞ்சை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி பலி!

 
suicide

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற கட்டிட தொழிலாளி, ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள வளத்தாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலையன். இவரது மகன் சாய்ராமன் (19). இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை உப்புகாரன் ரயில்வே கேட் அருகில் சாய்ராமன் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

thanjavur

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் ரயில்வே போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் சாய்ராமனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, சாய்ராமனின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி  அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சாலையில் உடலை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  பாபநாசம் போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.