அவிநாசியில் மதுபோதையில் பேருந்து சக்கரத்தில் சிக்கி வடமாநில இளைஞர் பலி... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு!

 
avinashi

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மதுபோதையில் சாலையில் தவறிவிழுந்த வடமாநில இளைஞர் மீது பேருந்து சக்கரம் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜவாதி ராமாராவ் ஆச்சாரி (32). இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் தங்கி, அங்குள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். விடுமுறை தினத்தையொட்டி நேற்று மாலை அவிநாசியில் பொருட்கள் வாங்க சென்ற ஜவாதி ராமராவ் ஆச்சாரி, அதிகளவு மது அருந்தியுள்ளார். பின்னர் போதையில் தள்ளாடியபடி அவிநாசி புதிய பேருந்து நிலையம் வந்த அவர், நிதானமின்றி வலைந்தவாறு சாலையில் நடந்து சென்றுள்ளார்.

avinashi

அப்போது, எதிர்பாராத விதமாக அவர் நிலைதடுமாறி திருப்பூரில் இருந்து சேயூர் நோக்கி சென்ற அரசு பேருந்தின் அடியில் விழுந்தார். அப்போது, பேருந்தின் பின்புற சக்கரம் ஏறியதில் ராமராவ் ஆச்சாரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசி போலீசார், அவரது உடலை கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, விபத்துக்காட்சிகள் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.