குளிர்சாதன பெட்டிக்குள் சடலத்தை வைத்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி... திருச்சி அருகே சோகம்!

 
trichy

திருச்சி அருகே இறந்த நபரின் சடலத்தை குளிர்சாதன பெட்டிக்ள் வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் நெம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகன் அய்யப்பன் (22). கூலி தொழிலாளி. இந்த நிலையில், நேற்று அய்யப்பனின் வீட்டின் அருகில் வசிக்கும் நாகராஜ் என்பவர் உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டார். துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அய்யப்பன், இறந்த நபரின் சடலத்தை வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட குளிர்சாதன பெட்டிக்கு மின்இணைப்பு கொடுத்துள்ளார்.

dead body

அப்போது, குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் அய்யப்பன் மற்றும் அருகில் நின்ற 2 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அய்யப்பன் மயக்கமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கிராமத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அய்யப்பன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார், அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அய்யப்பனின் தந்தை செல்வமணி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.