வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கை குழந்தையுடன் இளம்பெண் தர்ணா!

 
vellore

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த பெண், கை குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் சுகதீஷ். இவரது மனைவி நளாயினி (30). இவர் நேற்று காலை வேலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது 4 வயது மகன் மற்றும் கைக்குழந்தையுடன் வந்தார். அப்போது, திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தையுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை கண்டு, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

vellore

அப்போது பேசிய நளாயினி, தாங்கள் குடும்பத்துடன் மின்னூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருவதாகவும், கணவர் கூலி வேலைக்காக நாள்தோறும் வேலூருக்கு சென்று வருவதாகவும் தெரிவித்தார். போக்குவரத்து செலவு அதிகமாக இருந்ததால், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, கடந்த 3 மாதங்களுக்கு முன் வேலூர் மாவட்டம் மேல் மொணவூர் இலங்கை தமிழர் முகாமில் குடியேறியதாகவும் கூறினார். இந்த நிலையில், புதிதாக குடியேறிய தங்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய நிவாரண உதவித்தொகை, அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்தார்.

மேலும், இது குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை அளித்தும் இது வரை நிவாரண பொருட்கள் வழங்கவில்லை என கூறிய நளாயினி, தங்களுக்கு உடனடியாக அரசின் நிவாரணம் மற்றும் பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை அடுத்து, அதிகாரிகள் அவரை சமரசம் செய்து ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.