அவினாசி அருகே இளம்பெண் அடித்துக்கொலை... கள்ளக்காதலன் வெறிச்செயல்!

 
dead

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே இளம்பெண்ணை அடித்துக்கொன்று உடலை குப்பைக்கிடங்கில் வீசிய கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் பாகுல். இவரது மனைவி சுகன்யா (30). இத்தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். விசைத்தறி தொழிலாளியான சுகன்யாவுக்கு, சமீபத்தில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராயர்பாளையத்தை சேர்ந்த சரவணக்குமார் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து, சுகன்யா கணவர் மற்றும் பிள்ளைகளை விட்டு விட்டு, சரவணகுமாருடன் ராயர்பாளையத்தில் வசித்து வந்தார்.

avinashi

இந்த நிலையில், நேற்று சுகன்யா - சரவணக்குமார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுகன்யா கோபித்துக்கொண்டு திருப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், சரவணக்குமார் தானே உறவினர் வீட்டில் விடுவதாக கூறி, அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், அவினாசி அருகே தெக்கலூர் பகுதியில் சென்றபோது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணகுமார், சுகன்யாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து, சுகன்யாவின் உடலை தெக்கலூர் குப்பைகிடங்கில் வீசிவிட்டு, சரவணகுமார் தப்பியோடினார். நேற்று இரவு தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவினாசி போலீசார், கொலையான சுகன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சரவணக்குமாரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.