குப்பைக்கு தீ வைத்தபோது ஆடையில் தீப்பற்றியதில் இளம்பெண் பலி... கள்ளக்குறிச்சி அருகே சோகம்!

 
fire

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே குப்பைக்கு தீவைத்தபோது ஆடையில் தீப்பற்றியதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள எஸ்.ஒகையூர் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வசந்தி (33). செல்வம் வெளி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால் வசந்தி பிள்ளைகளுடன் ஒ.ஒகையூரில் வசித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு வசந்தி வீட்டின் அருகே குப்பைகளை குவித்து வைத்து அதற்கு  தீ வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பற்றி உடல் முழுவதும் தீ பரவியது. இதனால் வசந்தி அலறி துடிக்கவே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் வசந்தி பலத்த தீக்காயம் அடைந்தார்.

kallakurichi ttn

அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  சனிக்கிழமை இரவு வசந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வசந்தியின் பெற்றர் வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.