காரிமங்கலம் அருகே தள்ளுவண்டி மீது மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி பலி!

 
dead

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தள்ளுவண்டியின் மீது மின்கம்பி உரசி மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள மல்லிக்குட்டை ஊராட்சியை சேர்ந்தவர் பெருமாள்(44). இவர் பெரிய மாட்லாம்பட்டி பகுதியில் தள்ளு வண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து பெருமாள், அவரது மனைவி ஜோதி லட்சுமி ஆகியோர் தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு மல்லிக்குட்டைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா பந்தலுக்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக தள்ளுவண்டி உரசியுள்ளது. இதில் வண்டியின் மீது மின்சாரம் பாய்ந்ததில், அதனை தள்ளிச்சென்ற பெருமாள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

karimangalam

மேலும், அவரது மனைவி ஜோதி லட்சுமி பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் போலீசார், இறந்த பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.