கோவையில் சாலையோரத்தில் படுத்திருந்த தொழிலாளி எரித்துக்கொலை - நண்பர் வெறிச்செயல்!

 
cbe

கோவை சிங்காநல்லூரில் சாலையோரத்தில் தூங்கிய தொழிலாளி மீது டீசலை ஊற்றி எரித்துக்கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (30). இவர் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகரில் சாலையோரம் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி இரவு சாலையோரம் படுத்திருந்த சுரேஷின் மீது, மர்ம நபர் ஒருவர் திடீரென டீசலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த  சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வுசெய்தனர்.

dead

அப்போது, மர்மநபர் ஒருவர், தூங்கிக்கொண்டிருந்த சுரேஷ் மீது டீசலை ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகள் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சுரேஷுடன் அதே பகுதியில் கூலி வேலை செய்து வரும் கிருஷ்ணகிரி நொச்சிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி (58) என்பவர் தீ வைத்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் சுப்பிரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சம்பவத்தன்று சுரேஷ் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, தனது பையிலிருந்த பணத்தை சுரேஷ் எடுத்ததாக சந்தேகப்பட்டு, சுப்பிரமணி அவருடன் தகாறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பாட்டிலில் டீசலை வாங்கி வந்து சாலையோரத்தில் படுத்திருந்த சுரேஷ் மீது ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது.  இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார். இதனை அடுத்து, சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து, சுப்பிரமணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தடையை மீறி சுப்பிரமணிக்கு பாட்டிலில் டீசல் வழங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர் பாஸ்கரன்(62), காசாளர் பாலகிருஷ்ணன்(57) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

.