சத்தியமங்கலம் அருகே மீன்பிடிக்க சென்ற பெண் மீது பரிசல் கவிழ்ந்து பலி!

 
drowning

சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற பெண் மீது பரிசல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சத்தியமங்கலம் அடுத்த அரசூர் அருகே உள்ள மாக்கினா கோம்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி மனைவி ஆரோக்கிய மேரி (42). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவர் அந்தோணிசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆரோக்கிய மேரி, பவானி ஆற்றில் பரிசல் மூலம் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று ஆரோக்கிய மேரி, தனது தங்கை மல்லிகாவுடன் மீன்பிடிக்க சென்றார். தொடர்ந்து சத்தி ஈஸ்வரன் கோவில் படித்துறை பகுதியில் பவானி ஆற்றில் இவரும் பரிசல் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

sathyamangalam

அன்று மாலை அரியப்பம்பாளையம் அம்மன் கோவில் அருகே பவானி ஆற்று தடுப்பணையில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, ஆரோக்கிய மேரி ஆற்றின் நடுவில் உள்ள தடுப்பணை சுவரை தாண்டி செல்வதற்காக பரிசலை தூக்கிபோட்டு, அதில் ஏற முயன்றார். அப்போது, திடீரென பரிசல் நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து, ஆரோக்கிய மேரியை அமுக்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தங்கை மல்லிகா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆரோக்கியம் மேரியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஆரோக்கிய மேரி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.