சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றியதில் பெண் பலி!

 
fire accident

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றியதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த பரப்பன்காடு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி கண்ணகி (51). இவர்களுக்கு சரவணன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் தர்மலிங்கம் இறந்துவிட்டார். இதனால் கண்ணகி, தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கண்ணகி தனது வீட்டில் உள்ள கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது.

pudukkottai GH

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கண்ணகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கண்ணகியின் மகன் சரவணன் (30) அளித்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.