தஞ்சை அருகே மாட்டு வண்டி மோதி பெண் உயிரிழப்பு!

 
dead body

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது மாட்டு வண்டி மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ஆவணம் பெரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி(35). இவர் அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளார். நேற்று குழு கூட்டத்திற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மாட்டி வண்டு ஓட்டிவந்தார். அப்போது, திடீரென வண்டி மாடுகள் தறிகெட்டு ஓடி, ராஜேஸ்வரியின் மீது மோதின. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த ராஜேஸ்வரியின் மீது மாட்டு வண்டி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

peravurani

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேஸ்வரியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீசார், ராஜேஸ்வரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரின் கணவர் சுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், மாட்டு வண்டி ஓட்டுநர் ஆறுமுகத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.