பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் குதித்து வெல்டர் தற்கொலை!

 
drowned

பெருந்துறை அருகே வெல்டிங் தொழிலாளி கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள செங்கானூரை சேர்ந்தவர் சக்திவேல் (30). இவரது மனைவி சரண்யா (27). இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். சக்திவேல், குடும்பத்துடன் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் அன்னை சத்யா நகரில் வசித்து வருகிறார். மேலும், காஞ்சிகோவில் பகுதியில் உள்ள லேத்து பட்டறையில் வெல்டிங் தொழிலாளி ஆக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், சக்திவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

perundurai

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்த சக்திவேல், வெளியே படுத்து தூங்கியுள்ளார். சனிக்கிழமை அதிகாலையில் வெளியே புறப்பட்டு சென்ற அவர், அன்று மாலை செங்குட்டை அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் திடீரென குதித்துள்ளார்.  இது குறித்து தகவல் அறிந்த சக்திவேலின் உறவினர்கள், கீழ்பவானி வாய்க்காலில் சென்று தேடினர். அப்போது, சசிதோட்டம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் சக்திவேலை மீட்ட உறவினர்கள், அவரை சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த காஞ்சிகோவில் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சரண்யா அளித்த பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.