தேசிய அளவிலான உறைவாள் வீச்சு போட்டியில் தங்கம் வென்று திரும்பிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

 
ERODE

ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற 23-வது தேசிய அளவிலான உறைவாள் வீச்சு போட்டியில் முதலிடம் பிடித்து தமிழகம் திரும்பிய அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

23-வது தேசிய அளவிலான உறைவாள் வீச்சு போட்டிகள் ஜம்மு - காஷ்மீரில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் நாடு முழுவதும் 22 மாநிலங்களை சேர்ந்த 900 பள்ளி மாணவ - மாணவிகள் பங்கு பெற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ - மாணவியர் 90 மாணவியர் பங்கு பெற்றனர். ஜம்முதாவி எஸ்.சி.எஸ்.டி மைதானத்தில் கடும் குளிரில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற, தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ - மாணவியர் கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, ஹரியானா, இமாச்சல், அசாம் உட்பட பல போட்டியாளர்களை நேருக்கு நேர் எதிர் கொண்டனர்.

erode

கடும் சவால்களை எதிர்கொண்ட தமிழக அரசு பள்ளி மாணவ - மாணவியர்கள் 11 தங்கம், 15 வெண்கலம் உட்பட ஒட்டு மொத்தமாக முதலிடம் பிடித்து தமிழகம் திரும்பி உள்ளனர். மேலும், நேபாள நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச உறைவாள் வீச்சு போட்டிக்கு தேர்வாகி தமிழகத்திற்கும் அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கும் பெருமையை தேடி வந்துள்ளனர். ஒரு வார கால ரயில் பயணத்துக்கு பின்னர் ரயில் மூலமாக நேற்று ஈரோடு வந்த மாணவ, மாணவிகளை பூங்கொத்து கொடுத்து அவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.