2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த இளம்பெண்... நீரில் மூழ்கி 7 மாத ஆண் குழந்தை பலி!

 
dead

திருவண்ணாமலை அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், 7 மாத ஆண் குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த முகலார் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி. இவரது மனைவி கமலா. இத்தம்பதிக்கு 3 பெண் குழந்தைகளும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளது. ஆண் குழந்தைக்கு இயத கோளாறு இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இது தொடர்பாக ஏழுமலைக்கும், கமலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் கமலா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். 

infant

இந்த நிலையில், நேற்று மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு கமலா, 4 வயது பெண் குழந்தை மற்றும் 7 மாத ஆண் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அவர் திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் 2 குழந்தைகளையும் வீசிவிட்டு, தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் கிணற்றில் தத்தளித்த கமலா மற்றும் 4 வயது பெண் குழந்தையை உயிருடன் மீட்டனர். ஆனால் 7 மாத ஆண் குழந்தை நீரில் முழ்கியது. 

தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் மற்றும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குழந்தை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. தொடர்ந்து, குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய  திருவண்ணாமலை கிழக்கு போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.