பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி சூப் வியாபாரி பலி!

 
dead body

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மின்சாரம் தாக்கி சூப் கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெண்ணகோனம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (44). இவர் தனது வீட்டின் அருகே சூப் கடை நடத்தி வருகிறார்.  இவரது மனைவி கிருத்திகா. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.  இந்த நிலையில், சம்பவத்தன்று நேற்று மாலை சூப் கடைக்கு மின்விளக்கு பொருத்துவதற்காக தனது வீட்டில் இருந்து ஒயரை இழுத்துள்ளார். அப்போது, 2 ஒயர்களுக்கு இணைப்பு கொடுப்பதற்காக ஒயரை கடித்துள்ளார். அப்போது, மின் இணைப்பை துண்டிக்காதததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

perambalur

தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி சூப் வியாபாரி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.