ஆசனூர் அருகே காரை துரத்திய ஒற்றை யானையால் பரபரப்பு!

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் பகுதியில் சாலையில் சென்ற காரை ஒற்றை காட்டுயானை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே நேற்றிரவு 10 மணி அளவில் ஒற்றை காட்டு யானை சாலையில் கரும்பு துண்டுகளை சாப்பிட்டபடி நின்றிருந்தது. அப்போது, கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து கோவை நோக்கி கார் ஓன்று சென்று கொண்டிருந்தது. காரில் பெண்களும், குழந்தைகளும் இருந்தனர். நெடுஞ்சாலையின் நடுவே காட்டு யானை நிற்பதை கவனித்த ஓட்டுநர், காரை மெதுவாக யானையின் அருகே நகர்த்திச் சென்றார். அப்போது, கரும்பு சாப்பிடும்போது இடையூறு ஏற்படுத்துவதாக கருதிய அந்த காட்டுயானை ஆக்ரோஷத்துடன் காரை துரத்தியது.
இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் கூச்சலிட்டனர். அப்போது, ஓட்டுநர் துரிதமாக காரை பின்னோக்கி நகர்த்திச் சென்றார். இதனால் காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். பின்னர் சாலையில் சிறிது நேரம் உலாவிய காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் புறப்பட்டு சென்றது. இந்த காட்சிகளை காரில் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்த நிலையில், தற்பொது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.