கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து... 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயம்!

 
kallakurichi

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். 

கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நீலமங்கலம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 4.30 மணி அளவில் பள்ளி முடிந்து, 60 மாணவர்களுடன் பள்ளி பேருந்து மாணவர்களை இறக்கிவிட சென்று கொண்டிருந்தது. தச்சூர் அருகே ஏமப்பேர் ரவுண்டானா பகுதியில் சென்றபோது பேருந்தின் முன்னால் வாகனம் ஒன்று வந்துள்ளது. இதனால் ஓட்டுநர் பேருந்தை வளைக்க முயன்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராத விதமாக ரவுண்டானாவில் மோதி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

kallakurichi

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் பலத்த காயமடைந்தனர். விபத்தை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக காயமந்த மாணவ, மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேருந்தை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

kallkurichi

 தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். மேலும் , மாவட்ட எஸ்பி பகலவன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோரும் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.