ஏர்வாடியில் பைக் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து - 2 இளைஞர்கள் பலி!

 
accident

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இருசக்கர வாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே உள்ள தெற்கு மல்லல் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி மகன் மனோஜ் (25). அதே பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் பாலா (25). நண்பர்களான இருவரும் நேற்றிரவு சின்ன ஏர்வாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். ஏர்வாடி அரசு மருத்துவமனை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பாலம் கட்டுமான பணி நடைபெறும் பகுதியில் சென்றபோது, மனோஜ் வாகனத்தின் மீது எதிரே சாயல்குடியில் இருந்து ஏர்வாடி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து மோதியது.

ramnad gh

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து துக்கிவீசப்பட்டதில் மனோஜ், பாலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த ஏர்வாடி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலியான சம்பவம் தெற்கு மல்லல் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.