குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் சிக்கிக்கொண்ட தனியார் பேருந்து... கோவையில் பரபரப்பு!

 
cbe

கோவை இடையர்பாளையம் அருகே தடாகம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் பேருந்து சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கோவை தடாகம் சாலையில் சிவாஜி காலனி முதல் கே.என்.ஜி. புதூர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநில நெடுஞ்சாலையான தடாகம் சாலையின் பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளதால், சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. இந்த நிலையில், தடாகம் சாலையில் இடையர்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளி முன்பு கடந்த 2 நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு இருந்தன. எனினும் குழாய் பதிப்பு பணி தொடர்பாக அந்த பகுதியில் முறையான அறிவிப்பு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

bus

இந்த நிலையில், இன்று காலை அந்த வழியாக சென்ற தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக பள்ளத்திற்குள் சிக்கிக்கொண்டது. இதனை அடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். பின்னர் கிரேன் வாகனம் மூலம் பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை பள்ளத்தில் பேருந்தில் சிக்கிக் கொண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.